மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் - வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.
|நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக, இடைத்தரகர்கள் மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், 'மார்க் ஆண்டனி' படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டதாகவும், சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்து 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்ட நடிகர் விஷால், இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மராட்டிய முதல்-மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக, 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.