நடிகர் விக்ரம் பிறந்தநாள்: தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு
|நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று தங்கலான் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கலான்' என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ விக்ரம், அவரது கதாபாத்திரத்திற்காக தயாராகும் முறை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.