< Back
சினிமா செய்திகள்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து  பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்...!
சினிமா செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்...!

தினத்தந்தி
|
10 May 2023 12:22 PM IST

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்ட நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், 'ஆதார்' அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், விஜய் அளிக்கும் உதவிகள் சேரும் வகையில், இந்த நிகழ்ச்சி திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவியர் தலா மூன்று பேர் வீதம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ - மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை, விஜய் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் விலையில்லா விருந்து திட்டம் என்ற உணவு வழங்கும் திட்டத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதற்காக பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் உதவி செய்கிறேன் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒத்துழைப்பு தருமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் பிறந்த நாள் விழா, தலைவர்கள் சிலைக்கு மரியாதை என, விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்து அரசியலில் ஈடுபட்டு வருவது பிற அரசியல் கட்சியினரிடையே சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்