< Back
சினிமா செய்திகள்
துபாய் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம்
சினிமா செய்திகள்

துபாய் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
8 April 2024 5:26 PM IST

நடிகர் விஜய் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய்க்கு கேரள ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அங்கு நடிகர் விஜய்யை காண்பதற்காக படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அளித்த வரவேற்பு படத்திற்கு உணர்ச்சிகரமான விசயமாக அமைந்தது. அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

'கோட்' படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் துபாய் சென்றுள்ளார். அங்கு சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார் விஜய். இந்தப் புகைப்படத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த பலரும் 'விஜய் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கிறாரா?' என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இது தேவையில்லாத விஷயம் என விஜய் தரப்பில் கடிந்து கொண்டதால் இந்தப் படம் உடனே நீக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே துபாயில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் திரும்புவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய், 'தளபதி 69' படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கடுத்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபட இருக்கிறார் விஜய்.

மேலும் செய்திகள்