நடிகர் சங்க கட்டிடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி
|நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூபாய் ஒரு கோடிக்கான நிதியை, நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, '' தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய், நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக, அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது'' என்று அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மூத்த நடிகர் கமல்ஹாசன் சென்னை - ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.