< Back
சினிமா செய்திகள்
கங்குவா படப்பிடிப்பின்போது விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா
சினிமா செய்திகள்

'கங்குவா' படப்பிடிப்பின்போது விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

தினத்தந்தி
|
23 Nov 2023 1:06 PM IST

'கங்குவா' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் 'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்