விலங்கு வெப் தொடர் இயக்குனருடன் இணையும் நடிகர் சூரி
|இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் சூரி, கடந்த 2009-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தது இவர் குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கருடன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன். இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய திரு.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.