அஜித்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா
|நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அஜித்தை வைத்து ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த எஸ் ஜே சூர்யா அடுத்ததாக விஜயை வைத்து குஷி திரைப்படத்தையும் இயக்கினார்.
விஜய், கமல் என டாப் ஸ்டார்களுக்கு வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யா அடுத்து எப்போது அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என்ற ஒரு கேள்வி அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்தது. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக மாஸ் காட்டி இருந்தார் எஸ் ஜே சூர்யா. அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது இயக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
நடிகர் அஜித் குமாரை நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார்.இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பரில் முடியும் என்றும் அதன்பிறகு அஜித் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் படப்பிடிப்பில் சந்தித்துள்ளனர். சந்தித்த படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா, "பல ஆண்டுகளுக்குப் பின் என் வழிகாட்டி ஏகே (அஜித் குமார்) உடன் ஒரு மகிழ்ச்சியான தருணம்" எனப் பதிவிட்டுள்ளார்.