உடல்நலக்குறைவால் தேர்தல் பணியில் இருந்து விலகுகிறாரா நடிகர் சிவராஜ்குமார்
|நடிகர் சிவராஜ்குமார் மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகன் மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் ஆவார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகன் மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் ஆவார். நடிகர் சிவராஜ்குமாரை அவரது ரசிகர்கள் சிவண்ணா என்று அழைப்பார்கள். இவரது மனைவி கீதா சிவராஜ் குமார் ஆவார். இவர் தற்போது சிவமொக்கா தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் சிவராஜ் குமார் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு தீடிரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து சிவராஜ்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்கு இடையே நடிகர் சிவராஜ்குமார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர் சிறிது நாட்கள் ஓய்வுவெடுக்கும்படி நடிகர் சிவராஜ்குமாரிடம் தெரிவித்தார். அவரது பரிந்துரையை ஏற்று நடிகர் சிவராஜ்குமார் வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் அவர் வரும் நாட்களில் தனது மனைவிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.