நடிகர் சதீஷ் கவுசிக் மரணத்தில் திருப்பம்; பண்ணை உரிமையாளரின் 2-வது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
|நடிகர் சதீஷ் கவுசிக் மரணத்தில் பண்ணை உரிமையாளரின் 2-வது மனைவி கூறிய பல குற்றச்சாட்டுகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
புதுடெல்லி,
பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான சதீஷ் சந்திர கவுசிக் (வயது 66) கடந்த 9-ந்தேதி அதிகாலையில் காலமானார். நடிகர், இயக்குனர் என்பது மட்டுமின்றி தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
கடந்த 1987-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள், திரை துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழலில், சதீஷ் கவுசிக்கின் மரணத்தில் பல மர்ம விசயங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. அவரது நண்பரான விகாஸ் மாலு என்பவர் பண்ணை இல்ல உரிமையாளராக இருந்து வருகிறார். அவரது பண்ணை இல்லத்தில் வைத்து நடிகர் கவுசிக் உயிரிழந்து உள்ளார்.
அதற்கு முன்பு வரை நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை இரவில் கொண்டாடி உள்ளார். அதன்பின்னர், தூங்க சென்றார். ஆனால், இரவில் தனது மேலாளரை அழைத்து சுவாச கோளாறு பற்றி கூறியுள்ளார்.
இரவு 12 மணியளவில் மேலாளரை அழைத்து உள்ளார். பின்பு அதிகாலை 1.43 மணியளவில் குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரை மேலாளர் சேர்த்து உள்ளார். எனினும், சி.பி.ஆர். சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
அவர் ஹோலி கொண்டாடிய டெல்லி பண்ணை இல்லத்தில் உள்ள சி.சி.டி.வி.யின் 7 மணிநேரம் வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
எனினும், பண்ணை இல்ல உரிமையாளரின் 2-வது மனைவி அளித்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில், சதீஷ் ஜிக்கும், எனது கணவருக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் உண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்டில், சதீஷ் ஜி கொடுத்த ரூ.15 கோடியை திருப்பி தரும்படி எனது கணவரிடம் கேட்டார்.
ஆனால், எனது கணவர் இந்தியாவில் வைத்து தொகையை திருப்பி தருகிறேன் என கூறினார் என்று விகாசின் 2-வது மனைவி போலீசில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், இதுபற்றி கணவர் விகாசிடம் கேட்டபோது, சதீஷ் ஜியிடம் பணம் வாங்கினேன். ஆனால், கொரோனா காலத்தில் பணம் தொலைந்து விட்டது என கூறினார். பெரிய தொகையை திருப்பி தரும் எண்ணத்தில் விகாஷ் இல்லை.
சதீஷ் கவுசிக்கை எதிர்கொள்ள புளூ பில்ஸ் மற்றும் ரஷிய அழகிகளை பயன்படுத்துவேன் என என்னிடம் கூறினார். அதனாலேயே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தெரிவித்து உள்ளேன் என்று விகாஷின் 2-வது மனைவி கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், விகாஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என அவரது 2-வது மனைவி புகார் ஒன்றில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.
அந்த புகாரில், விகாஷின் மகனும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கினார். இதனை முற்றிலும் தாங்கி கொள்ள முடியாமல் கடந்த அக்டோபரில் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று விகாஷின் 2-வது மனைவி அந்த புகாரில் தெரிவித்து உள்ளார்.
எனினும், விகாஷின் முதல் மனைவியின் மைனர் மகனும் போக்சோ சட்டத்தின் கீழ், விகாஷின் 2-வது மனைவி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.