மீண்டும் இணைந்த 'அயோத்தி' பட கூட்டணி
|நடிகர் சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
மதம், மூட நம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாகப் பேசியது அயோத்தி திரைப்படம்.
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், புகழ், பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. மத நல்லிணக்கத்தையும் மனிதர்களின் மேன்மையையும் மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகர் சசிகுமாருக்கும் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.
புதுமையான திரைக்கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பு ஆகியவற்றால் அயோத்தி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வரும் வட இந்தியக் குடும்பத்தினருக்கு நடக்கும் எதிர்பாராத சம்பவமும், சசிகுமார் அவர்களுக்கு எவ்வாறு உதவினார் என்பதுவே அயோத்தி படத்தின் கதைக் கருவாகும்.
இந்த நிலையில், இயக்குநர் மந்திரமூர்த்தி கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. தற்போது, இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.