முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் நடிகர் சரவணன் மீது அவரது மனைவி புகார்
|நடிகர் சரவணன் மற்றொரு பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக அவரது மனைவி சூர்யஸ்ரீ தெரிவித்தார்.
சென்னை,
திரைப்பட நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.
இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து தனது இடத்தை மீட்டு தருமாறு நடிகர் சரவணன் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இரண்டு கடைகளையும் போலீசார் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, இந்த இடம் நடிகர் சரவணனுக்கு உரிமையானது என்று நோட்டீஸ் ஒட்டினர். இதனைக் கண்டித்து இராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெபமணி, நடிகர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக பேசினர்.
இந்த நிலையில் நடிகர் சரவணின் முதல் மனைவி சூர்யஸ்ரீ , சரவணன் மீது முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு சூர்யாஸ்ரீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "என்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் நான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.
பட வாய்ப்பு இல்லாத போது, எனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட சரவணன் பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்" என்று தெரிவித்தார்.