புத்தாண்டில் நடிகர் சந்தானம் செய்த செயல்... பாராட்டும் ரசிகர்கள்...!
|கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு பிறகு சந்தானம் காமெடியனாக நடிப்பதை தவிர்த்தார்.
சென்னை,
சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி காமெடியனாக உயர்ந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு பிறகு காமெடியனாக நடிப்பதை தவிர்த்தார். இனி கதையின் நாயகனாக மட்டுமே நடிக்கப்போவதாக தெரிவித்தார்.
இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்தை முன்னணி நாயகனாக உயர்த்தியது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. மக்கள் இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு தினத்தில் நடிகர் சந்தானம் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
விவசாயம் மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சந்தானம் புத்தாண்டு தினத்தில் மரம் நடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், 'இனிய புத்தாண்டு வாழ்த்துகள், தொடர்ந்து மரம் நடுங்கள், ஒன்றாக உலகை குணப்படுத்துவோம்' என்ற பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.