< Back
சினிமா செய்திகள்
73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்... சமூகவலைதளங்களில் அலப்பறை கிளப்பும் ரசிகர்கள்...!
சினிமா செய்திகள்

73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்... சமூகவலைதளங்களில் அலப்பறை கிளப்பும் ரசிகர்கள்...!

தினத்தந்தி
|
12 Dec 2023 9:43 AM IST

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்னை,

பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் ஆகிய 6 மொழிகளில் 169 படங்களில் நடித்து உலகம்முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2000ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சினிமா துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக 2019ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் அலப்பறை கிளப்பி வருகின்றனர்.

மேலும் முன்னணி சமூகவலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராமில் Thalaivar 170, SuperStar Rajinikanth, HBD SuperStar Rajinikanth போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'தலைவர் 170' படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்