இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!
|செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டிகள் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளன.
187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தொடக்க விழாவை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "நிகழ்ச்சியின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும் நிகழ்ச்சி முடிந்த உடனேயே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததற்கும் நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்கள் குரலையும், ஒலிம்பியாட் நிகழ்ச்சி குறித்த பாராட்டுக்களையும் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அங்கு இருந்தது அந்த நாளை இன்னும் அழகாக்கியது" என்று குறிப்பிட்டுள்ளார்.