விருதுகளை அவமதித்த நடிகர் நசுருதீன் ஷா
|இந்தி திரையுலகின் மூத்த நடிகர் நசுருதீன் ஷா. இவர் விருதுகளை அவமதித்து கருத்து தெரிவித்து உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
நசுருதீன் ஷா அளித்துள்ள பேட்டியில், "கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர். தற்போது சினிமா துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என்று யாரோ அறிவிப்பது எந்த அளவுக்கு சரியானது?
விருதுகளைப் பார்த்து நான் பூரித்துப் போக மாட்டேன். சமீபத்தில் எனக்கு அறிவித்த இரண்டு விருதுகளை வாங்கிக் கொள்ள கூட நான் செல்லவில்லை. ஆரம்பத்தில் விருதுகள் வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அதன் பிறகு விருதுகள் எப்படி வருகின்றன என்பது தெரிந்ததும் அவற்றின் மீது எனக்கு இருந்த ஆர்வம் போய்விட்டது.
ஏதேதோ பெயர்களால் விருதுகளை கொடுக்கிறார்கள். அவற்றால் எனக்கொன்றும் பெருமையாக இல்லை. எனக்கு நிறைய விருதுகள் வந்துள்ளன. ஒருவேளை நான் பண்ணை வீடு கட்டிக் கொண்டால் அதில் பாத்ரூம்களுக்கு கைப்பிடியாக இந்த விருதுகளை வைத்துக் கொள்வேன். நான் ஜனாதிபதி வாயிலாக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றபோது மட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன்'' என்றார்.