< Back
சினிமா செய்திகள்
நடிகர் மாரிமுத்து மரணம்: இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன் - வைரமுத்து இரங்கல்
சினிமா செய்திகள்

நடிகர் மாரிமுத்து மரணம்: இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன் - வைரமுத்து இரங்கல்

தினத்தந்தி
|
8 Sept 2023 11:38 AM IST

எனது கவிதைகளில் உயிருள்ள ஒலிப்பேழை, அவரின் மறைவுக்கு என் தமிழும் சேர்ந்து துக்கப்படுகிறது என நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வருகை தந்துள்ளார்.

இவர் பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்த சீரியலில் வரும் எம்மா ஏய் அந்த வசனத்தின் மூலம் மிகவும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும்,புலிவால் ஆகிய படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.. இந்த நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தம்பி மாரிமுத்துவின்

மரணச் செய்தி கேட்டு

என் உடம்பு ஒருகணம்

ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்

சென்றுகொண்டிருந்தவனை

மரணத்தின் பள்ளத்தாக்கு

விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்

உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து

நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்

திருமணம் செய்துவைத்தேன்

இன்று அவன்மீது

இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு

இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்

கலை அன்பர்களுக்கும்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

ஆறுதல் சொல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்