'கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்துவிட்டது' - மதம் மாற்றம் குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேச்சு
|கிறிஸ்துவ மதத்தை சார்ந்த நடிகர் லிவிங்ஸ்டன் இந்துவாக மதம் மாறி உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
சென்னை,
இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் கடந்த 1982ம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி, விரலுக்கேத்த வீக்கம், சுந்தரபுருஷன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமடைந்தார்.
தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரின் மூத்த மகள் ஜோவிகாவும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையே கிறிஸ்துவ மதத்தை சார்ந்த இவர் இந்துவாக மதம் மாறி உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மதம் மாற்றம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அந்த பேட்டியில், 'கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்' என்று பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.