சபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
|நடிகர் ஜெயராம் தனது மனைவியும் நடிகையுமான பார்வதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்ட புகைப்படத்தை ஜெயராம் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.
ஜெயராம் அடிக்கடி மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்று வழிபட்டு வருகிறார். சித்திரை மாதத்தை முன்னிட்டு தற்போது மனைவியுடன் அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயராம், தமிழில் கோகுலம், முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி, ஏகன், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானபோதும் சபரிமலைக்கு சென்று வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.
ஜெயராம் மகன் காளிதாசும் படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது இந்தியன்-2 படத்திலும் காளிதாஸ் நடித்து வருகிறார்.