பணமோசடி புகாருக்கு நடிகர் விளக்கம்
|பணமோசடி புகாருக்கு நடிகர் பாபுராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதில் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர். இந்த நிலையில் திருவில்வமலாவை சேர்ந்த ரியாஸ் என்பவர் பாபுராஜ், வாணி விஸ்வநாத் ஆகியோர் கூடாஷா என்ற படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ.3.14 கோடி கடன் பெற்று பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர் என்று ஒட்டப்பாலம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாருக்கு பதில் அளித்து பாபுராஜ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. படத்துக்கும், என் மனைவி வாணி விஸ்வநாத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் எனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுமாறு கோரினர். அந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை. படக்குழுவினருக்கான உணவு மற்றும் தங்குமிடம் எனது ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான பணத்தை படம் வெளியானதும் தருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்து விட்டது. புகாரை சட்டப்படி சந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.