சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ பரிசளித்த நடிகர் பாலா
|மின்சார ரெயிலில் சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு நடிகர் பாலா ஆட்டோ பரிசளித்துள்ளார்.
சென்னை,
சின்னத்திரையில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தன்னுடைய சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 கொடுத்து உதவினார். செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்தார்.
சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசளித்திருந்தார். இந்நிலையில், மின்சார ரெயிலில் சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு நடிகர் பாலா ஆட்டோ பரிசளித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,
அந்த அக்காவின் பெயர் முருகம்மாள். அவருக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று வருகிறார். இவரது ஆசை சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டவேண்டும் என்பதுதான். இவரது இந்த ஆசை என்னுடைய ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.