சீரியல் நடிகை திவ்யாவின் வீட்டிற்கு வக்கீல்களுடன் சென்ற நடிகர் அர்ணவ்
|வக்கீல்களை அழைத்துக் கொண்டு நடிகர் அர்ணவ் திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்குச் சென்றார்.
சென்னை,
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ணவ், தன்னுடன் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான திவ்யாவை அடித்ததாகக் கூறி புகார் அளிக்கப்பட்டதன் பேரில் மாங்காடு போலீசார் அர்ணவை கைது செய்தனர்.
பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அர்ணவ் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவிற்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ணவ், தன்னுடன் சில வக்கீல்களை அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்குச் சென்றார்.
அவர்களை நடிகை திவ்யா வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அர்ணவ் தரப்பில், இந்த வீடு தனது பெயரில் இருப்பதாகவும், தற்போது திவ்யா அத்துமீறி இதில் குடியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதே சமயம் அர்ணவ் நிபந்தனை ஜாமீனில் இருக்கும் போது இந்த வீட்டிற்கு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவ்யா தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறும், தங்கள் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் போலீசார் அறிவுறுத்திச் சென்றனர். இதன் காரணமாக நடிகை திவ்யா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.