நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யாவுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு
|நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே. சூர்யாவுக்கு, பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டு இருந்தது.
சென்னை,
நடிகர்கள் பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ் மற்றும் நடிகை வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரஸாக்கர். இந்த படத்திற்கு எழுத்து, இயக்கம் யாத சத்யநாராயணா ஆவார். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், 1948-ம் ஆண்டில் நடந்த ஐதராபாத் விடுதலை இயக்கம் பற்றிய நிகழ்வை அடிப்படையாக கொண்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் படம் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், படத்தில் நடித்திருந்த நடிகர்கள் பாபி சிம்ஹா, தலைவாசல் விஜய், நடிகை வேதிகா, தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே. சூர்யாவுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. ஆனால், அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதற்கான காரணங்களை அவருடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியவில்லை.
இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். மன்னித்து கொள் தம்பி. டிரைலர் வெளியீட்டுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், ரஸாக்கர் படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பட குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.