< Back
சினிமா செய்திகள்
கோடை வெப்பம் தணிய புது ஐடியா... நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகர் அமிதாப் பச்சன்
சினிமா செய்திகள்

கோடை வெப்பம் தணிய புது ஐடியா... நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகர் அமிதாப் பச்சன்

தினத்தந்தி
|
18 May 2023 5:39 PM IST

கோடையின் வெப்பம் தணிவதற்காக நபர் ஒருவர் புதுமையான யோசனையுடன் செயல்பட்ட வீடியோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டு உள்ளார்.

புனே,

கோடை காலத்தில் மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்து உயிரினங்களும் கூட குளுமையை தேடி செல்கின்றன. வீட்டில் இருப்பவர்கள் பேன் (காற்றாடி), ஏர் கூலர் மற்றும் ஏ.சி. என மின் சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஓரளவு நன்மை ஏற்பட்டாலும், அதுவும் சூட்டை கிளப்பி, சுற்றுச்சூழலுக்கும் வெப்ப வாயுக்களை பரப்பி விடுகிறது என கூறப்படுகிறது. இயற்கை பொருட்களால் உருவான பனை ஓலை, தென்னம் ஓலை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட விசிறியை பயன்படுத்தும் காலமும் இருந்தது.

முன்பு, பல திருமண விழாக்களில் கூட, கையால் வீசப்படும் இந்த விசிறிகளை வருபவர்களுக்கு கொடுப்பது வழக்கம். காலப்போக்கில் திருமண அரங்கங்களே குளு குளு வசதியுடன் வர தொடங்கி விட்டன.

எனினும், வசதியற்றவர்கள் குளுமையை தேடி கோடையில் அல்லல்படுகின்றனர். இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், நபர் ஒருவர் தனது தலைமுடியை குடுமி போன்று உருமாற்றி, அதனை காற்றாடியாக பயன்படுத்தி நடந்து செல்லும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதனால், கோடை காலத்தில் குளுமையை அனுபவித்து கொண்டே நடந்து செல்கிறார். அவரது சொந்த முயற்சியால் இதனை செயல்படுத்தி உள்ளார்.

அவரது குடுமி போன்ற தலைமுடியானது, அவர் தலையாட்டி கொண்டே நடந்து செல்லும்போது சுற்றி, சுற்றி வந்து காற்றாடியின் பணியை செய்கிறது. அந்த பதிவின் தலைப்பில், நாளின் வெப்பத்தில், குளுமையை அனுபவிக்க சொந்த காற்றாடியை சுமந்து செல்லும் நபர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு சில மணிநேரத்தில் இந்த வீடியோவை 44 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 5 லட்சம் பேர் லைக்கும் செய்து உள்ளனர். பலர் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஆதரவான விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்