துபாயில் தனது மெழுகு சிலையை திறந்து வைத்த நடிகர் அல்லு அர்ஜுன்
|'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை நடிகர் அல்லு அர்ஜுன் திறந்து வைத்தார்.
துபாய்,
தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமானவர்களுக்கு லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள புகழ்பெற்ற 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் மெழுகு சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகிய இந்தி நட்சத்திரங்களின் சிலைகள் உள்ளன.
இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் தற்போது இணைந்துள்ளார். 'புஷ்பா' திரைப்படம் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்த அல்லு அர்ஜுன், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தற்போது 'புஷ்பா' படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்றார். அங்குள்ள 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை அல்லு அர்ஜுன் திறந்து வைத்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதனை ஒரு மைல்கல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.