ரூ.29 கோடி வரி செலுத்திய நடிகர் அக்ஷய் குமார்
|நடிகர் அக்ஷய் குமார் வருமான வரியாக ரூ.29 கோடி வரை செலுத்தி இருப்பதாக இந்தி இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
அதிகமாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு வருமான வரித்துறை சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு இந்த சான்றிதழை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கும் அதிக வரி செலுத்தியதற்காக வருமான வரித்துறை கவுரவ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்தி திரையுலகில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார் முதல் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்தில் நடிக்க ரூ.135 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரது ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆனாலும் வருமானத்துக்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுகிறார் என்கின்றனர். தற்போது அவர் வரியாக ரூ.29 கோடி வரை செலுத்தி இருப்பதாக இந்தி இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதற்காகவே அவரை வருமான வரித்துறை சான்றிதழ் வழங்கி கவுரவித்து இருக்கிறது.