நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட காதலர் தின பதிவு... கஜோலுக்கு அல்ல
|கஜோலை தவிர்த்து விட்டு, காதலர் தினத்தன்று நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட சமூக ஊடக பதிவு ரசிகர்களிடம் சூடான விமர்சனங்களை பெற்று உள்ளது.
புனே,
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ரோஜா மலர்கள், பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லெட், கேக்குகள் என காதலர்கள் தங்களது அன்பை பரிமாறி கொள்ளும் பொருட்களை இந்த தினத்தில் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்கின்றனர்.
காதலர்கள் இடையே காதல் ஒருபுறம் வளர்வது எப்படியோ? ஆனால் இந்த பொருட்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் ஆண்டுதோறும் பல கோடியை எட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இயற்கையாக நிகழும் காதல் என்ற உணர்வு, வியாபாரத்திற்காக செயற்கையாக கட்டமைக்கப்படுகிறது என்றும் பலரால் கூறப்படுகிறது.
காதலை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. பார்த்ததும் காதல், பார்க்காமல் காதல் என தொடங்கி பல்வேறு வகையான காதலும் திரைவடிவம் பெற்று வருகின்றன.
இந்தி திரையுலகில் காதலர்களாக இருந்து பின்னர், திருமண பந்தத்தில் இணைந்த பல ஜோடிகள் உள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் கஜோல்.
இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். காதலர் தினத்தன்று நடிகர் அஜய் தேவ்கன் சமூக ஊடகத்தில் அன்பை வெளிப்படுத்தும் பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.
ஆனால், அது அவரது காதல் மனைவியான கஜோலுக்கு அல்ல. அவர் எழுதிய பதிவில், முதல் பார்வையிலேயே அது (காதல்) ஏற்பட்டதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் போக போக, மெல்ல ஆனால் உறுதியாக எனது சிந்தனையில் நிறைந்த ஒன்றாக கேமிரா மாறியது.
என்னை பரவசப்படுத்த ஒருபோதும் தவறாததற்காக இந்த காதலர் தின பதிவை அதற்கு அர்ப்பணிக்கிறேன். எனதுலக பார்வையை மேம்படுத்தி காட்டியதற்காக அன்பிற்குரிய கேமிராவுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.
போலா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்து உள்ளார். எனினும், கஜோல் மேடத்திற்கு ஒரு பதிவும் இல்லையே? என விமர்சனங்கள் எழுந்து உள்ளன. வீட்டுக்கு வருவீர்கள் இல்லையா? அப்போது உங்களை அவர் கவனித்து கொள்வார் என சமூக ஊடக பயனாளர் ஒருவர் கிண்டலாக தெரிவித்து உள்ளார்.