இந்தி படத்தில் நடித்த அனுபவம்: நடிகை ஜோதிகா நெகிழ்ச்சி
|இந்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஜோதிகா 1998-ல் 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 'ஸ்ரீ' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். துஷார் இயக்கி உள்ளார்.
பிரபலமான பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகி உள்ளது. தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஜோதிகா தனது காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் ஜோதிகா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்ரீ படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டேன். கனத்த இதயத்துடன் அவர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். ஸ்ரீ படக்குழுவினர் திறமையானவர்கள். அர்த்தமுள்ள இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இந்த படத்தின் கதாநாயகன் ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை. இந்தி திரையுலகின் சிறந்த நடிகர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. படக்குழுவினரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.