ஆரம்பத்தில் நடிப்பு வரவில்லை... ரம்யா கிருஷ்ணனின் சினிமா அனுபவம்
|தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படையப்பா, பாகுபலி படங்கள் அவருக்கு புகழ் சேர்த்தன. ரஜினி ஜோடியாக நடித்த ஜெயிலர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறும்போது, ''சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு நடிப்பு வரவில்லை. 'வெள்ளை மனசு' என்ற தமிழ் படத்தின் மூலம்தான் முதன் முதலில் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். அப்போது நான் சிறந்த நடிகையாகவும் இல்லை.
1988-ல் நடித்த முதல் வசந்தம் படத்தை இப்போது பார்த்த எனது தாயார் நீ இந்த நடிப்பை வைத்துக்கொண்டு இவ்வளவு காலம் நடிகையாக எப்படி நீடிக்கிறாய் என்று ஆச்சரியப்பட்டு கேட்டார். இதில் இருந்து எனது நடிப்பு அப்போது எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதோடு நான் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால்தான் தெலுங்கு சினிமா துறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அங்கு கிடைத்த ஒவ்வொரு பட வாய்ப்பையும் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன்'' என்றார்.