பணகஷ்டத்தால் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன்- வில்லன் நடிகர் லால்
|''ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார் வில்லன் நடிகர் லால்.
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த வில்லன் நடிகர் லால், நடிகை தமன்னா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் பண நெருக்கடியால் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று லால் வருத்தம் தெரிவித்து உள்ளார். இவர் தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லால் கூறும்போது ''எனக்கு கொரோனா பரவல் ஊரடங்கின்போது நிறைய பணக் கஷ்டம் ஏற்பட்டது. அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் நிறைய யோசித்தேன். அதில் நடிப்பதற்கு முன்னால் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது என்று நினைத்தேன். அப்போது இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சினை வரும் என்றோ ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ நினைக்கவில்லை. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார்.