இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டு; கன்னட நடிகர் சேத்தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு
|காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சேத்தன் மீது இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது.
அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது.
இந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும்போது, படத்தில் இடம் பெற்ற பூட்டா கோலா இந்து கலாசாரத்தின் ஒரு பகுதி என கூறினார். ஆனால், கன்னட நடிகர் சேத்தன் குமார் என்ற சேத்தன் அகிம்சா கூறும்போது, பூட்டா கோலா இந்து கலாசாரம் கிடையாது என தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
இதனை கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் குரல் கொடுத்தனர். மதஉணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் சேத்தனுக்கு எதிராக ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, மக்களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
விசாரணை அதிகாரி முன் ஆஜராக சேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன், ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் வகையில் டுவிட்டரில் சேத்தன் பதிவிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.