விவாகரத்து வதந்திகள்: அபிஷேக் பச்சன் ஆதங்கம்
|பிரபலங்களாக இருப்பதால் நாங்கள் இதையெல்லாம் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
மும்பை,
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் சில காலமாக பரவி வருகிறது. இந்த செய்தியை இருவருமே மறுக்காமல் மவுனம் காத்து வந்தது மேலும் சர்ச்சையை பலமாக்கியது.
பொதுநிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா- அபிஷேக் இருவரும் சில நேரங்களில் சேர்ந்து வந்தாலும், நீண்ட வருடங்களாக அணிந்து வந்த திருமண மோதிரத்தை கையில் இருந்து அபிஷேக் கழற்றியதே இந்த விவாகரத்து சர்ச்சை இன்னும் சூடுபிடிக்கக் காரணமாக அமைந்தது. அந்த வகையில் சமீபத்தில் அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியாக கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். சமீபத்தில் பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண நேரில் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் அபிஷேக் பச்சன் யுகே மீடியாவுக்கு அளித்த பேட்டியில்,
தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை காட்டி நான் இன்னும் திருமணம் ஆனவன் தான். எங்களுக்கிடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள்தான் இதனை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் பரபரப்பான செய்திகளுக்காக நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இந்த வதந்திகளுக்கெல்லாம் நான் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. பிரபலங்களாக இருப்பதால் இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ஆராத்யா கடந்த 2011-ம் ஆண்டு பிறந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் தங்களது 17-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.