மீண்டும் நடிக்க விரும்பும் அப்பாஸ்
|தமிழ், தெலுங்கில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அப்பாஸ் திடீரென்று சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்து சென்று விட்டார். அங்கு பைக் மெக்கானிக் ஆக வேலை பார்த்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. தற்போது சென்னை திரும்பி மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அப்பாஸ் அளித்துள்ள பேட்டியில், "சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். ஏதாவது ஒரு தொழில் செய்து என்னை அடையாளப்படுத்திக் கொள்ள நியூசிலாந்து சென்று மெக்கானிக் வேலை பார்த்தேன்.
தற்போது மீண்டும் இந்தியா வந்திருக்கிறேன். சினிமா என்னை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். எனக்குள் நடிப்பு தீ இருக்கிறது முன்பு இருந்த அப்பாஸுக்கும் இப்போது உள்ள அப்பாஸுக்கும் அனுபவம் மேலோங்கி இருக்கிறது. ரசிகர்கள் என் மீது அதிக அன்பு வைத்திருப்பதை புரிந்து கொண்டேன். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு 40-45 வயதில் ரொமான்டிக்கான ஹீரோ வேண்டும், ஒரு ரசிக்கும்படியான வில்லன் கேரக்டர் வேண்டும் என்றால் அது நானாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.