ஏன் பேட்டி கொடுப்பதில்லை? - பகத் பாசில் விளக்கம்
|என்னைப் பார்க்கும்போது நீங்கள் சிரித்தால்போதும், அதுவே நீங்கள் எனக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்று பகத் பாசில் கூறினார்.
திருவனந்தபுரம்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. ரூ.150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பகத் பாசில் பேசியதாவது, எனக்கு பேட்டி கொடுப்பது பிடிக்காது. ஏனென்றால், அப்போது எனக்கு என்ன பேசவேண்டும் என்பது தெரியாது. இதனால்தான் படத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு இதுவே எனக்கு எளிதான வழி. என்னைப்பற்றி யாரும் பேசுவதை நான் விரும்பவில்லை.
என் படங்களை மட்டும் பாருங்கள், அதுவும் நன்றாக இருந்தால், அது சரியில்லை என்றால், பார்க்காதீர்கள். குடும்பத்துடன் இருக்கும்போது புகைப்படம் எடுப்பது எனக்கு பிடிக்காது. குறிப்பாக நான் என் அம்மா, என் மனைவியுடன் வெளியே இருக்கும்போது புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது நீங்கள் சிரித்தால்போதும், அதுவே நீங்கள் எனக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு, இவ்வாறு கூறினார்.