இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் போது வெளியாகவுள்ள அமீர்கான் பட டிரெய்லர்...
|அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் டிரெய்லர், இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்'(Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது.
அந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாகசைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'லால் சிங் சத்தா' படத்தின் டிரெய்லர் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.