தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு குடியேறும் அமீர்கான்
|தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார், அமீர்கான். புதிய படங்களுக்கான கதைகளையும் இப்போதைக்கு அவர் கேட்பதாக இல்லை. இதற்கிடையில் மும்பையில் இருந்து சென்னைக்கு தற்காலிகமாக குடியேற அமீர்கான் திட்டமிட்டுள்ளார். அதற்கு காரணம், அவரது தாயார் ஜூனத் ஹூசைன் தானாம்.
கடந்த ஆண்டு ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், ஆஸ்பத்திரிக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததும், 'சிதாரே ஜமீன் பர்' என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் அமீர்கான் திட்டமிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு 'தாரே ஜமீன் பர்' படத்தில் அமீர்கான் நடித்து இயக்கி இருந்தார். இப்போது தயாராகும் புதிய படம் காமெடி கலாட்டாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.