இந்த பண்பை ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து கற்றுக்கொண்டேன் - அமீர் கான்
|ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் அமீர் கான் நடித்திருந்தார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கஜினி படப்பிடிப்பின்போது ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து கற்றுக்கொண்டது குறித்து அமீர்கான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது,
ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு தனித்துவமான நபர். படத்தின் சில காட்சிகள் குறித்து ஒரு அறிவுரை வழங்கினால் அவரின் கருத்தை வெளிப்படையாக கூறுவார். மற்றவர்கள், அது பிடிக்கவில்லை என்றால் நுட்பமான முறையில் கூறுவர். ஆனால், அது ஏ.ஆர்.முருகதாசுக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த தயக்கமும் இன்றி மனதில் தோன்றுவதை பேசுவார்.
அதைபோல், அவருக்கு அது பிடித்துவிட்டது என்றால் உடனே பாராட்டுவார். இந்த பண்பை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவ்வாறு கூறினார்.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்கி வருகிறார். அதற்கு பின்னர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்க உள்ளார்.