தண்ணீரில் அமலா பால்- பிருத்விராஜ் சமூக வலைதளங்களில் வைரலாகும் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்
|மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கபட்டு உள்ளது.
சென்னை,
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை டைரக்டர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கபட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது.
வேலை காரணமாக வெளியூருக்குச் செல்லும் பிருத்விராஜ் தனது மனைவி அமலா பாலை பிரிந்து விட்டு பாலை வனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்த்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
ஆடுஜீவிதம் படத்திற்காக உடல் மெலிந்து ஐ விக்ரம் போல ஓடாக தேய்ந்து உடலை வருத்திக் கொண்டு பிருத்விராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். கண்டிப்பாக இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஆடுஜீவிதம்" டிரெய்லர் முழுக்கவே மண் புழுதி பறக்க மரியான் படத்தில் தனுஷ் இருந்தது போல பார்க்கவே முடியாத அளவுக்கு ஆட்டு மந்தையுடன் அழுக்கு படர்ந்த சட்டையுடன் அகோரி போல மாறி காட்சியளிக்கிறார். இந்த டிரெய்லரில் அமலா பால் வரும் காட்சிகள் மட்டுமே கண்களுக்கு குளிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்துக்கு பிறகு அமலா பாலுக்கு மீண்டும் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.