< Back
சினிமா செய்திகள்
உண்மையான பான் இந்தியா ஸ்டார்
சினிமா செய்திகள்

உண்மையான 'பான் இந்தியா' ஸ்டார்

தினத்தந்தி
|
6 Aug 2023 11:39 AM IST

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதையும் தாண்டி, தன்னுடைய நடிப்புத் திறமையால் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பவர், துல்கர் சல்மான். சினிமாத்துறைக்குள் நுழைந்த கடந்த 10 ஆண்டுகளில் அவர் தொட்டிருக்கும் உயரம் மிகப்பெரியது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என்று சினிமாவில் சில துறைகளையும் தொட்டுப்பார்த்து வெற்றிகண்டிருப்பவர்.

2012-ம் ஆண்டு 'செகண்ட் ஷோ' என்ற படத்தின் மூலமாக மலையாள சினிமாவிற்குள் நுழைந்த துல்கர் சல்மான், முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக காட்டிக் கொள்வதில் முனைப்பு காட்டவில்லை. அதுதான் அவரது தொடர் வெற்றிக்கான காரணம்.

'உஸ்தாத் ஹோட்டல்' என்ற இரண்டாவது படத்திலேயே ஸ்டார் ஓட்டல் சமையல்காரர் கதாபாத்திரத்தில் நடித்தார். மென்மையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. ஆக்ஷன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. அனைத்து விதத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி துல்கர் சல்மானுக்கு உண்டு.

அந்த வசீகரத்தின் காரணமாகத்தான், மலையாள சினிமாவிற்குள் நுழைந்த இரண்டே ஆண்டுகளில், தமிழ் சினிமாவிலும் அவரால் கால் பதிக்க முடிந்தது. 2014-ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான 'வாயை மூடிப் பேசவும்' என்ற அந்தப் படம், மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருந்தது. அப்போது வரை அதுபோன்ற ஒரு நோயைப் பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை என்றாலும், நகைச்சுவையின் வாயிலாகவும், சில இடங்களில் செண்டிமென்ட் மூலமும் அந்தப் படத்தின் கதையை மிக லாவகமாக நகர்த்தி இருந்தார்கள்.

அந்த சினிமாவில் குறிப்பிட்ட நோய் அறிகுறியை போன்றதுதான் 'கொரோனா'. 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த காலகட்டத்தில், பலரும் சமூக வலைத்தளங்களில் 'வாயை மூடிப் பேசவும்' படத்தை டிரெண்ட் ஆக்கியதையும் பார்க்க முடிந்தது. தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாகவே அந்தப் படம் அமைந்திருந்தாலும் கூட, வரிசைகட்டி வரும் தமிழ் படங்களை எல்லாம் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒரு நிதானத்தின் காரணமாகத்தான், துல்கர்சல்மான் இன்றளவும், பிற மொழிகளிலும் ரசிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவராக இருந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி', தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் வெளிவந்த 'ஹெ சினாமிகா' ஆகிய 4 நேரடி தமிழ் சினிமாவில்தான், துல்கர்சல்மான் நடித்திருக்கிறார். அதே போல்தான் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்களை நன்றாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

2018-ம் ஆண்டு 'மகாநடி' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமான துல்கர்சல்மான், அதன்பின்னர் கடந்த ஆண்டு 'சீதா ராமம்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அதே வருடத்தில்தான், 'கர்வான்' என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். 2019-ம் ஆண்டு 'த ஷோயா பேக்டர்' என்ற படத்தின் வாயிலாக இந்தியின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டு 'சூப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்ட்டிஸ்ட்' என்ற பாலிவுட் படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருந்தது.

துல்கர் சல்மான் சினிமாத் துறைக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே நிதானத்திற்கு சொந்தக்காரராகவே இருந்து வந்திருக்கிறார். சினிமாத் துறையில் ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்த புதுமுக ஹீரோக்கள், அடுத்ததாக தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு, ஒரு வருடத்தில் ஏழு அல்லது எட்டு படங்கள் வரை நடித்து விடும் வழக்கம் உண்டு. இல்லை என்றால் 10 படங்கள் வரை நடிப்பதற்கு ஒப்பந்தமாவது போட்டு வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் துல்கர்சல்மான் அப்படி எந்த அவசரமும் காட்ட வில்லை. தனக்கான கதாபாத்திரம் என்றால், அது எனக்காக காத்திருக்கும் என்பதை நம்புபவர். அதனால் அவர் அவசரம் இன்றியே தன்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் என்பது தான் சராசரி. 2014-ம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 4 படங்கள் வெளிவந்திருக்கிறது.

அதே போல் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டால், அடுத்த படத்திற்கான கதையை மட்டும் கேட்டு வைத்துக்கொள்வார். தன் கையில் இருக்கும் முதல் படம் முடிவடைந்ததும் அடுத்த படம் ஆரம்பமாகும் வேளையில்தான், இன்னொரு கதையை ஓ.கே. செய்வார்.

தற்போது துல்கர் சல்மான் மலையாளத்தில் 'கிங் ஆப் கோதா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம், இந்த மாதம் 24-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு, 'பாகுபலி' திரைப்படம் மூலம் புகழ்பெற்ற தெலுங்கு நடிகரான ராணாவுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அதில் துல்கர் சல்மானே கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்திற்கு 'காந்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் இருந்தோ அல்லது பாலிவுட்டில் இருந்தோ ஒரு நடிகரின் படம் 'பான் இந்தியா' மூவியாக வருகிறது என்றால், அவர் ஒரு மொழியில் நடித்து அந்த படம் மற்ற மொழிகளில் வெளியிடப்படுகிறது. அப்படி ஒரு மொழிப்படமாக உருவாக்கப்பட்டு, பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும் படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் 'பான் இந்தியா' ஸ்டாராக கருதப்படுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து மொழி சினிமாக்களிலும் நேரடியாக நடித்து, அங்குள்ள ரசிகர்களை தன்னுடைய நடிப்புத்திறமையால் கவர்ந்து, தான் நடிக்கும் படங்களையும் வெற்றிப்படமாக கொடுக்கும் நடிகரே உண்மையில் 'பான் இந்தியா' ஸ்டாராக இருக்க முடியும். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று நேரடிப் படங்களில் நடித்து, அங்குள்ள ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்து வைத்துள்ள துல்கர் சல்மான், நிச்சயமாக ஒரு 'பான் இந்தியா ஸ்டார்' என்பதை எவராலும் மறுக்க இயலாது.

மேலும் செய்திகள்