கடினமான 6 மாதங்கள்... சிகிச்சை பெறும் சமந்தா உருக்கம்
|நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனாலும் உடல்நிலை முழுவதுமாக குணமாகவில்லை. இதையடுத்து ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் 'கேரவேனில் கடைசி மூன்று நாட்கள்' என்று குறிப்பிட்டு சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகப்போவதை குறிப்பிட்டு உள்ளார்.
இன்னொரு பதிவில் "மிக நீண்ட கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வர உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கு காரணம் அவர் எடுத்துக்கொண்ட ஹைபர் பர்ரிக் ஆக்சிஜன் தெரபி சிகிச்சை என்று கூறப்படுகிறது. இந்த சிகிச்சையை எடுப்பவர் தூய காற்று நிரம்பிய தனி அறையில் அடைக்கப்படுவார். அந்த அறையில் காற்றழுத்தம் இயல்பை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த சிகிச்சை 2 மணிநேரம் நீடிக்கும் என்றும் இது சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. சமந்தா இப்படி கடினமான சிகிச்சை பெற்று வருவதை நினைத்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.