சமுத்திரக்கனியால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள் - இயக்குநர் பாலா
|மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள் என்று இயக்குநர் பாலா கூறினார்.
சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானி இப்படத்தை இயக்கி உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாலா பேசுகையில், "சமுத்திரக்கனி ரசிகனாக இங்கு வந்திருப்பதில் பெருமையடைகிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன். ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார்.
அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு இருக்கிற மனசு பெரியது. அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடிக்கிற படமாகட்டும் அல்லது அவருக்கு பிடித்த அப்பா மாதிரியான படமாகட்டும் அதை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய மனது இருக்கிறது. இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அதை அவர் விட்டுவிடக்கூடாது" என்றார்.