சர்ச்சையில் சிக்கிய பிரபல திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு
|நரிக்குறவ மக்களை தடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய திரையரங்கில், நரிக்குறவ மக்களுக்காக 'முந்திரி காடு' திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' திரைப்படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த விவகாரத்தில் அமைந்தகரை தாசில்தார் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதி மறுத்த திரையரங்கு பணியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தற்போது நரிக்குறவ மக்களை தடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய திரையரங்கில், நரிக்குறவ மக்களுக்காக 'முந்திரி காடு' திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 'முந்திரிகாடு' திரைப்படத்தில் நடித்த நடிகர் சோமுவின் ஏற்பாட்டின் பேரில் இந்த சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இதனை ஏராளமான நரிக்குறவ மக்கள் கண்டு ரசித்தனர். இந்த திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.