பிரபல கவர்ச்சி நடிகைக்கு பலாத்கார, கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
|பிரபல கவர்ச்சி நடிகை உர்பி ஜாவித்துக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா,
இந்தி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் உர்பி ஜாவித். இன்ஸ்டாகிராம் உள்பட இவரது சமூக ஊடகங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும்.
இதற்காகவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் கொண்டிருக்கிறார். இவரை பிடிக்காத சிலரும் உள்ளனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவருக்கு எதிராக கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.
தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து உர்பிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக வேறு, வேறு எண்களை உபயோகப்படுத்தி உள்ளார்.
இதன்பின்னர் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. நடிகை உர்பி ஜாவித்துக்கு அந்த நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார். வாட்ஸ்அப் தொலைபேசி அழைப்புகள் வழியேயும் இந்த மிரட்டல் தொடர்ந்துள்ளது.
இதுபற்றி மும்பை கோரேகாவன் காவல் நிலையத்தில் உர்பி ஜாவித் புகார் பதிவு செய்துள்ளார். மிரட்டலான தொலைபேசி பேச்சுகள் அடங்கிய பதிவுகளையும் அவர் போலீசிடம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நவீன் கிரி என தெரிய வந்தது. அவரை பீகாரின் பாட்னா நகரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடருதல் மற்றும் குற்ற நோக்கோடு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.