புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி பார்த்த குஷ்பூ, தமன்னா..! பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தால்தான் நாடு முன்னேறும் என குஷ்பூ டுவீட்
|இதற்கிடையே நடிகை குஷ்புவும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யும் சந்தித்தனர்.
புதுடெல்லி,
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் கடந்த மே மாத இறுதியில் திறக்கப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர், பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்தது. இந்த நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடர், முதல் நாளான கடந்த 18-ந்தேதி பழைய பாராளுமன்றத்தில் தொடங்கி மறுநாளில் இருந்து புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதனையொட்டி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரம்மகுமாரிகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பாராளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் அவர்களை அழைத்துச்சென்று புதிய பாராளுமன்றத்தை சுற்றிக்காட்டுகிறார்கள். இரு அவைகளின் மாடங்களிலும் அமர வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கச் செய்கிறார்கள்.
இந்த வகையில் நடிகைகளும் அழைக்கப்படுகிறார்கள். இதன்படி 19-ந்தேதி இந்தி நடிகைகள் கங்கனா ரணாவத், ஈஷா குப்தா, பாடகி சப்னா சவுத்ரி, பாடகர் சுமித்ரா குஹா, ஆடை வடிவமைப்பாளர் ரினா டாக்கா, நடன கலைஞர்கள் நளினி கம்லினி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தி நடிகைகள் பூமி பெட்னேகர், ஷெஹ்லான் கில், டோலிசிங், ஷிபானி பேடி ஆகியோர் வந்தனர். இந்த நிலையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா மற்றும் திவ்யா தத்தா உள்ளிட்டோர் வந்திருந்தனர். இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடியது. அவர்களுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதிய பாராளுமன்றத்தை சுற்றிப்பார்த்தனர். மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதங்களை நடிகைகள், பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்தனர்.
இதற்கிடையே நடிகை குஷ்புவும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யும் சந்தித்தனர். இவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். இதைப்போல பிற நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
மேலும், புதிய பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டதை நேரில் பார்த்த பெருமை கிடைத்தது என்றும், அதற்காக என்னை அழைத்ததற்கு மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கும், அனுராக் தாக்குருக்கும் மிகவும் நன்றி என்றும் பதிவிட்டு உள்ளார்.
இதைப்போல நடிகை தமன்னா செய்தியாளர்களிடம் பேசும்போது, "இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்" என்று கூறினார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்துக்கு இப்படி நடிகைகள் வருவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாராளுமன்றத்தில்கூட திரைப்பட விளம்பரங்கள் நடக்கின்றன" என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளார்.
இதற்கிடையே நடிகை குஷ்புவும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யும் சந்தித்தனர்.