'பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும்' - யுவன் சங்கர் ராஜா
|விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி கோட்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. காதல் கொண்டேன், மன்மதன், மங்காத்தா, பையா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது, விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி கோட்' படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில், சென்னையில் ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார். அப்போது மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அவர் பேசுகையில்,
'ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், இசையமைப்பாளராக நான் தோல்வியடைந்துவிட்டதாக முத்திரை குத்திவிட்டார்கள். அதற்காக நான் அழுதிருக்கிறேன். பிறகு இசையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும். நாம் நடந்து போய் கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் எடுத்துக்கொள்ள கூடாது. வெறுப்பவர்கள் உங்களை கீழே இழுக்க முயற்சிப்பார்கள். ஆனால், நீங்கள் எப்போதும் தலை நிமிர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்,' என்றார்.