< Back
சினிமா செய்திகள்
தி கேரளா ஸ்டோரி படத்தில் பயங்கர பலாத்கார காட்சி; பார்த்து விட்டு நடிகை அதா சர்மா பாட்டி கூறியது என்ன...?
சினிமா செய்திகள்

தி கேரளா ஸ்டோரி படத்தில் பயங்கர பலாத்கார காட்சி; பார்த்து விட்டு நடிகை அதா சர்மா பாட்டி கூறியது என்ன...?

தினத்தந்தி
|
20 May 2023 8:54 PM IST

தி கேரளா ஸ்டோரி படத்தில் இடம் பெற்ற பயங்கர பலாத்கார காட்சிகளை குடும்பத்தினர் பார்த்து விட்டு என்ன கூறுவார்களோ? என பயந்தேன் என்று நடிகை அதா சர்மா கூறி உள்ளார்.

திருவனந்தபுரம்,

தி கேரளா ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளிவந்தது முதல் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போய், பின்னர் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர் என்று அமைந்திருந்த காட்சிகளால் எதிர்ப்பு கிளம்பியது. படம் சட்டரீதியாக சில விசயங்களை எதிர்கொண்டது. இதனால், பட காட்சிகளில் தோன்ற கூடிய 3 பெண்களை பற்றியது என படத்தின் டிரைலரை மாற்றும் கட்டாயத்திற்கு ஆளானது.

அவர்களில் ஒருவராக, இந்த படத்தில் ஷாலினி என்ற வேடமேற்று நடிகை அதா சர்மா நடித்து உள்ளார். அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, சிரியாவுக்கு போகிறார். அதன்பின் மற்றொரு நபருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறார். படத்தில் பயங்கர பலாத்கார காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

இந்த நிலையில், இந்த படம் பற்றி அவரது பாட்டி கூறிய விசயங்களை பற்றி பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டார். இதுபற்றி நடிகை அதா சர்மா கூறும்போது, படத்தின் கதைப்பற்றி என்னுடைய தாயாருக்கும், பாட்டிக்கும் தெரியும். பாட்டி என்ன சொல்வாரோ என்று பதற்றத்தில் இருந்தேன். அதுவும் படத்தில் இடம் பெற்று உள்ள பலாத்கார காட்சிகளை பற்றி என்ன சொல்ல போகிறாரோ என்ற அச்சத்தில் இருந்தேன்.

அந்த அசவுகரிய தருணங்களில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று மட்டுமே வருத்தத்தில் இருந்தேன். ஆனால், 90 வயதுடைய பாட்டி குடும்பத்தில் மனஉறுதியான நபர். அவர் படம் பார்த்து விட்டு, கல்வி மற்றும் தகவல் அறியும் அனுபவம் தனக்கு கிடைத்தது என கூறினார். அதன்பின், என்னுடைய அனைத்து மாணவர்களும் இந்த படம் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

அதற்கு நான், இது வயது வந்தோர் பார்க்க கூடிய படம் என அவரிடம் கூறினேன். அதற்கு பாட்டி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்க வேண்டும். இளஞ்சிறுமிகள் கூட இந்த படம் பார்க்க வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை பெற வேண்டும். அது அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கு உதவும் என்று பதிலளித்து உள்ளார் என நடிகை அதா சர்மா கூறியுள்ளார்.

தி கேரளா ஸ்டோரி படத்தின்படி, பெண்கள் 3 பேரை லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்துகின்றனர். பின்னர் அவர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது. திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து உள்ளனர்.

நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். படம் வெளியானதும், கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை. தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காள அரசு படத்திற்கு தடை விதித்தது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகை அதா சர்மா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் பேசும்போது, படத்தின் மீது நீங்கள் அன்பும், ஆதரவும் காட்டி இருக்கிறீர்கள். தற்போது, கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டு, உண்மையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இளம்பெண்களின் பின்னணியை பற்றி கவனித்து கேளுங்கள். அவர்களை பாராட்டுங்கள் என பேசினார். இதில், சிக்கி இரையான பெண்களின் எண்ணிக்கைக்கு மக்கள் சான்று கேட்கின்றனர்.

ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களால் எப்படி சான்று தர முடியும் என அவர் கேட்டுள்ளார். அப்போது, படத்தில் வரும் நிமா என்ற பெண்ணின் வேடம் பற்றி குறிப்பிட்ட அவர், தினசரி 15 முதல் 20 பேரால் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முற்படுகிறார். அதற்கு அவர்கள் சான்று கேட்கின்றனர்.

இதுபற்றி சர்மா கூறும்போது, 15 பேர் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக உங்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்றால், நீங்கள் என்ன சான்று தருவீர்கள்? ஷாலினி (சர்மாவின் வேடம்) காதலில் துரோகத்திற்கு ஆளாகிறாள். காதலில் துரோகம் செய்யப்பட்டதற்கு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என கேட்டுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆர்ஷா வித்யா சமாஜம் ஆசிரமத்தில் உள்ள 26 இளம்பெண்களை அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஊடகத்தின் முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

படத்தின் லாபத்தில் ரூ.51 லட்சம் தொகையை, நன்கொடையாக ஆசிரமத்தில் உள்ள பெண்களின் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டுக்கான உதவியாக வழங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்