'விலங்குகளுக்காக எடுக்கப்பட்ட படம்' - அனிமலை கடுமையாக விமர்சித்த பாடகர் ஸ்ரீநிவாஸ்
|ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு 'அனிமல்' படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி உள்ளது.
சென்னை,
பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதற்கிடையே இந்த படம் கடந்த 26-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி உள்ளது. இந்த படத்தை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்களும் இந்த படத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'விலங்குகளுக்காக விலங்குகளால் எடுக்கப்பட்ட படம்தான் அனிமல். நான் உண்மையான விலங்குகளை அவமானப்படுத்தவில்லை' என பதிவிட்டு உள்ளார்.
நடிகை ராதிகா விமர்சனம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராதிகா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'யாராவது ஒரு படத்தை பார்த்து எரிச்சல் அடைந்துள்ளீர்களா..? நான் குறிப்பிட்ட ஒரு படத்தை பார்த்து கடுமையாக கோபமடைந்துள்ளேன்' என பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் அனிமல் திரைப்படத்தைதான் இவ்வாறு விமர்சித்துள்ளார் என தெரிவித்தனர்.