செல்பி எடுக்க முயன்ற ரசிகர்; கோபத்தில் தட்டி விட்ட நடிகர் ஷாருக் கான்...
|மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது, கோபத்தில் அதனை நடிகர் ஷாருக் கான் தட்டி விட்டது சர்ச்சையானது.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள மும்பை விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய நடிகர் ஷாருக் கான் வெளியே வரும்போது, ரசிகர் ஒருவர் அவரை நெருங்கி சென்று தனது மொபைல் போனில் செல்பி புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்று உள்ளார்.
அப்போது, நடிகர் நடிகர் ஷாருக் கான் அவரை அந்த பக்கம் தள்ளி விட்டார். இதில் அந்த ரசிகரின் போன் சற்று தள்ளி போய் கீழே விழுந்தது. அந்த நபரை முறைத்து பார்த்து விட்டு திரும்பிய நடிகர் ஷாருக் கான் மற்றவர்களை நோக்கி புன்னகைத்து விட்டு, உடனடியாக தனது காரை நோக்கி விரைந்து சென்றார்.
இந்த வீடியோ வெளிவந்து சர்ச்சையாகி உள்ளது. அவர் டுங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு திரும்பியுள்ளார் என கூறப்படுகிறது. அவருடன் மேலாளர் பூஜா மற்றும் மெய்க்காப்பாளர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்ததும் ரசிகர்கள் கும்பலாக அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, பலரும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முயன்றனர். அதில் இந்த ரசிகர் சற்று நெருங்கி சென்று உள்ளார் என கூறப்படுகிறது.
நடிகர் ஷாருக் கான் டுங்கி மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.