புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி
|புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் நடிகர் கொரோனாவுக்கு பலியானார்.
அசாமிய திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ். இவர் 300-க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கிஷோர் தாஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 31. கிஷோர் தாஸ் உடலை அசாமுக்கு அனுப்பி வைக்குமாறு அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தமிழக அரசை கேட்டுக்கொண்டதாகவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொண்டு வர முடியவில்லை என்றும் அசாம் எம்.எல்.ஏ. ஹேமங்கா தாகுரியா தெரிவித்து உள்ளார். இதையடுத்து கிஷோர் தாஸ் இறுதி சடங்குகள் சென்னையிலேயே நடந்துள்ளன. கிஷோர் தாஸ் மறைவுக்கு அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.