நடிகையுடனான முத்த காட்சிக்கு முன் இறைச்சியை தவிர்த்த பிரபல நடிகர்
|தோர் லவ் அண்ட் தண்டர் படத்தில் நடிகையுடனான முத்த காட்சியில் நடிப்பதற்கு முன் பிரபல நடிகர் இறைச்சியை சாப்பிடாமல் தவிர்த்துள்ளார்.
வாஷிங்டன்,
அதிரடி காட்சிகள் நிறைந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் தோர் லவ் அண்ட் தண்டர். கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் 25 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தில் தோர் வேடத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்து உள்ளார். கடவுளை வெறுக்கும், அவரை அழிக்க நினைக்கும் கோர் என்ற வேடத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்துள்ளார். நாயகியாக நடாலி போர்ட்மேன் மற்றும் டெஸ்சா தாம்ப்சன், ரஸ்செல் குரோவ் உள்ளிட்டோர் படத்தில் நடித்து உள்ளனர்.
நடிகர் கிறிஸ் ஹெம்வொர்த், படத்தில் முத்த காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு முன் இறைச்சி சாப்பிடாமல் தவிர்த்து உள்ளார். இதுபற்றி இங்கிலாந்து நாட்டின் கேபிட்டல் வானொலிக்கு பேட்டியளித்த நடாலி, படப்பிடிப்பு தளத்தில் முத்த காட்சி எடுப்பதற்கு முன் கிறிஸ் இறைச்சி சாப்பிடாமல் அதனை தவிர்த்து விட்டார்.
அவர் உண்மையில் சிறந்தவர். நான் சைவம் சாப்பிடுபவள் என்பதனால் முத்த காட்சியன்று காலையில் கிறிஸ் இறைச்சி சாப்பிடவில்லை. ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை இறைச்சி சாப்பிட விரும்புபவர் அவர். நான் கோபப்படவோ அல்லது அதனை பற்றி கவலைப்படவோ இல்லை. ஆனால், அவர் அதனை கவனத்தில் கொண்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று நடாலி கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடாலியுடன் நடித்த மற்றொரு நடிகையான டெஸ்சா தாம்ப்சன் கூறும்போது, கிறிஸ் காலையில் இறைச்சி சாப்பிடாமல் இருந்து விட்டார் என்பது எனக்கு தெரிய கூட செய்யாது. காலையில் இறைச்சி சாப்பிடுவதில் அதிக விருப்பமுள்ளவர் கிறிஸ். ஆனால், அவர் அப்படி இருந்தது ஆச்சரியமளிக்கிறது என கூறியுள்ளார்.